கைலாஷ் மானசரோவரில் 2-வது நாளாக 250 இந்தியர்களை மீட்ட நேபாள ராணுவம்

கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்று நேபாளத்தில் சிக்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் முயற்சியை வெளியுறவு அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் ஹில்சா பகுதியில் இருந்து 250 இந்திய பக்தர்களை நேபாள ராணுவத்தினர் நேற்று பத்திரமாக மீட்டனர்.

மேலும் 336 இந்தியர்கள் சிமிகோட் பகுதியிலிருந்து சுர்கேத் நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.

சீனாவின் திபெத் எல்லையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு புனிதப் பயணம் சென்று திரும்பும்போது, பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, திபெத்தை ஒட்டிய நேபாள மலைப் பகுதியில் இந்திய பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் 525 பக்தர்களும் ஹில்சாவில் 550 பேரும் திபெத்திய பகுதியில் மற்றொரு 500 பேரும் சிக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று முன்தினம் குறிப்பிட்டார்.

இதையடுத்து நேபாள அரசின் உதவியுடன் இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை சுஷ்மா ஸ்வராஜ் முடுக்கிவிட்டார். இதில் நேற்று முன்தினம் சிமிகோட் பகுதியிலிருந்து 158 பக்தர்கள் மீட்கப்பட்டு இந்திய எல்லையை ஒட்டியுள்ள நேபாள்கஞ்ச் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தப் பணியில் 7 வர்த்தக விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில் நேற்று ஹில்சாவில் இருந்து 250 பேர் மீட்கப்பட்டனர். இதற்காக ஹில்சா - சிமிகோட் இடையே 50 முறை ஹெலிகாப்டர்கள் சென்று வந்தன.

இது தவிர சிமிகோட்டில் இருந்து 336 இந்தியர்கள் சுர்கேத் என்ற இடத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் இவர்கள் பஸ்கள் மூலம் நேபாள்கஞ்ச் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தப் பணியில் 17 விமானங்களும் 3 நேபாள ராணுவ ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. நேபாள்கஞ்ச்- சிமிகோட்- ஹில்சா தடத்தில் நிலைமையை நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் கண்காணித்து வருகிறது.

தமிழகத்தில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 23 பேரில் 19 பேர் சிமிகோட் நகரில் பத்திரமாக இருப்பதாக இந்தியத் தூதரகம் கூறியுள்ளது.

ஹில்சாவில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு. ஆனால் சிமிகோட் நகரில் தங்குமிடம், உணவு, தகவல் தொடர்பு மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளன. இங்கிருந்து 158 பேர் நேற்று முன்தினம் நேபாள்கஞ்ச் கொண்டுவரப்பட்டனர்.

அனைத்து நவீன வசதிகளும் கொண்ட பெரிய நகரான நேபாள்கஞ்ச்சில் இருந்து சாலை வழியே 3 மணி நேரத்தில் உ.பி.யின் லக்னோவை அடைந்து விடலாம் என இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

பக்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் ஹாட் லைன் வசதி ஏற்படுத்தியுள்ளது. இங்கு உறவினர்களுக்கு பதில் அளிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் பேசும் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நிலவும் வானிலைக்கு ஏற்ப அனைத்து பக்தர்களும் 3 அல்லது 4 நாட்களில் மீட்கப்படுவார்கள் என காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று முன்தினம் கூறியது.

Share:

No comments:

Post a Comment