சுற்றுச்சூழல் மாசுபடாத ஆடை உற்பத்தி: வெ.இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தல்
சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ஆடைகளை உற்பத்தி செய்ய வேண்டுமென, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் வெ.இறையன்பு ஐஏஎஸ் அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாநகர் முதலிபாளையத்திலுள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்களுக்கான ஜவுளித் துறை புத்தாக்க வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நேற்று நடந்தது. திருப்பூர் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். இதில், வெ.இறையன்பு பேசியதாவது:
இன்றைக்கு எந்த தொழில்துறையை எடுத்துக்கொண்டாலும், உடைக்கு என ஓர் அங்கீகாரம் அளித்துவிடுகிறார்கள். ஆடையின் வடிவமைப்பு, அவரவர் பார்க்கும் தொழிலுக்கு ஏற்ப மாறுபட்டுள்ளது. இதில் நாகரிகமும், பண்பாடும் கைகோர்த்து ஓர் இலக்கை ஏற்படுத்த முன்வரத் தொடங்கிவிட்டன.
ஜவுளித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை புகுத்தி, சிறந்த தொழில்முனைவோர்களாக இளைஞர்கள் உருவாக வேண்டும். இளைஞர்களை புதிய தொழில்முனைவோர்களாகவும், மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பவர்களாகவும் ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும்.
நெகிழிக்கு மாற்று
புதிய சிந்தனைகள்தான் கண்டுபிடிப்புகளை உருவாக்கும். ஜவுளித் துறைக்கும் புதிய சிந்தனையாளர்களால்தான் புதிய ஆடை வடிவமைப்புகளை உருவாக்க முடியும். இத்தகைய புதிய தொழில்முனைவோர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
இதேபோல, நெகிழிக்கு மாற்றாக எளிதில் மக்கக்கூடிய மூலப்பொருட்கள் மற்றும் மாற்றுப்பொருட்களை வடிவமைக்க தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் ஆடைகளை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும் என தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குநர் வெ.இறையன்பு கூறினார். தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் சஜீவனா, திருப்பூர் தொழில் முனைவோர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment