பட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்களை நீக்க பிஎஸ்இ முடிவு
பட்டியலிடப்பட்ட 222 நிறுவனங்களை சந்தையில் இருந்து நீக்குவதற்கு மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) முடிவு செய்திருக்கிறது. இந்த பங்குகள் கடந்த ஆறு மாதமாக வர்த்தகமாகாமல் இருப்பதால் பிஎஸ்இ இந்த முடிவினை எடுத்திருக்கிறது.
போலி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் பிஎஸ்இ இந்த முடிவினை எடுத்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 331 போலி நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் செயல்படாத 2 லட்சம் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.
ஜூலை 4-ம் தேதி முதல் 210 பங்குகள் நீக்கப்படுகின்றன என பிஎஸ்இ தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. தவிர ஏசியன் எலெக்ட்ரானிக்ஸ், பிர்லா பவர் சொல்யூஷன்ஸ், கிளாசிக் டைமண்ட்ஸ் (இந்தியா), இன்னோவேட்டிங் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களை என்எஸ்இ தன்னுடைய சந்தையில் இருந்து இதர காரணங்களுக்காக நீக்கி இருக்கிறது. இந்த பங்குகளையும் பிஎஸ்இ நீக்குவதாக அறிவித்திருக்கிறது.
வர்த்தகமாகாமல் இருப்பதை தவிர இதர காரணங்களுக்காக சந்தையில் இருந்து நீக்கப்படும் நிறுவனங்களின் நிறுவனர்கள், இயக்குநர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தையில் நிதி திரட்ட முடியாது.
பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் வசம் உள்ள பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ள வேண்டும். பங்குச் சந்தை அமைக்கும் குழு பரிந்துரை செய்யும் விலையில் இந்த பங்குகள் திரும்ப வாங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் ஆறு நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக வர்த்தகமாகாமல் உள்ளன. இந்த பங்குகளும் இன்று முதல் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட் டிருக்கிறது.
முன்னதாக 200-க்கும் மேற்பட்ட பங்குகள் கடந்த ஆறு மாதமாக வர்த்தகமாகாமல் இருப்பதாக கடந்த மே மாதம் பிஎஸ்இ அறிவித்தது.
No comments:
Post a Comment