அணுசக்தி ஒப்பந்தம்: ஈரானுடன் 5 வல்லரசு நாடுகள் 6-ம் தேதி ஆலோசனை
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன், ரஷ்யா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வரும் 6-ம் தேதி வியன்னாவில் கூடி விவாதிக்கின்றனர்.
ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, உலக அளவில் ஈரானை தனிமைபடுத்து வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது. ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது.ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை பிற நாடுகள் வாங்குவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதனால், கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் தாங்கள் ஒப்பந்தத்தை தொடர்வதாக மற்ற வல்லரசு நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஈரானுடன், சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆலோசனை நடத்த உள்ளன. ஐந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் வரும் வெள்ளியன்று சந்தித்து பேசுகின்றனர். இத்தகவலை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
சந்திப்பின்போது, அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்காவின் நிலைப்பாடு, கச்சா எண்ணெய் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களும் விரிவாக ஆலோசனை நடத்துகின்றனர்.
No comments:
Post a Comment