டாடா சன்ஸ் - மிஸ்திரி வழக்கில் 9-ம் தேதி தீர்ப்பு

டாடா சன்ஸ் மற்றும் சைரஸ் மிஸ்திரி இடையேயான வழக்கின் தீர்ப்பு வரும் 9-ம் தேதி அறிவிக்கப்படும் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) அறிவித்திருக்கிறது. நேற்று தீர்ப்பு வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பில் சில திருத்தங்கள் செய்ய இருப்பதால் வரும் 9-ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என ஆணையத்தின் நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள்.

டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்த சைரஸ் மிஸ்திரி கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். இவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக டாடா சன்ஸ் இயக்குநர் குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து டாடா சன்ஸ் குழுமத்துக்கும், சைரஸ் மிஸ்திரிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் தலையீடு இருந்ததாக சைரஸ் மிஸ்திரி குற்றம் சாட்டினார். சிறு முதலீட்டாளர்களுக்கு எதிராக டாடா சன்ஸ் விதிமுறைகள் இருப்பதாகவும் மிஸ்திரி கூறினார். மிஸ்திரி வெளியேற்றத்துக்கு பிறகு டாடா சன்ஸ் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்சிஎல்டியில் மிஸ்திரி வழக்கு தொடுத்தார். 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் மிஸ்திரியின் வழக்கினை என்சிஎல்டி தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2017 அக்டோபர் முதல் 2018 பிப்ரவரி வரையில் விசாரணை நடைபெற்றது.தற்போது தீர்ப்பு வெளியாக இருக்கிறது. டாடா சன்ஸ் குழுமத்தில் மிஸ்திரி குடும்பத்துக்கு 18 சதவீத பங்குகள் உள்ளன. 2012-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய தலைவர் ரத்தன் டாடாவுக்கு 70 வயதானதைத் தொடர்ந்து, சைரஸ் மிஸ்திரி டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்றார். பதவி ஏற்ற நான்கு ஆண்டுகளில் அவர் நீக்கப்பட்டார்.

Share:

No comments:

Post a Comment