மதிமுக முப்பெரும் விழா: ஸ்டாலின், அன்பழகனுக்கு வைகோ நேரில் அழைப்பு
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து கட்சியின் முப்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுகவின் வெள்ளி விழா, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் பொதுவாழ்வுப் பொன்விழா ஆகிய மூன்றையும் இணைத்து வரும் செப்டம்பர் 15-ம் தேதி முப்பெரும் விழாவாக ஈரோட்டில் நடக்கவுள்ளது. அதன்படி வைகோவின் பொதுவாழ்வுப் பொன்விழா மலரை வடிவமைக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று முன்தினம் இரவு அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது முப்பெரும் விழா மாநாட்டில் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிடவும், நிறைவுரையாற்றவும் வைகோ வேண்டுகோள் விடுத்தார். பொன்விழா மலருக்கு கட்டுரை வேண்டி மலர்க்குழுத் தலைவரும் மதிமுக பொருளாளருமான கணேசமூர்த்தி அளித்த கடிதமும் அவரிடம் வழங்கப்பட்டது. வைகோவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின், கட்டுரை அனுப்பி வைக்கவும் ஒப்புதல் தந்ததாக மதிமுகவினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகனை வைகோ நேற்று காலை நேரில் சந்தித்தார். அவரிடம் முப்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்து பொன்விழா மலருக்கு கட்டுரை வழங்க வேண்டுகோள் விடுத்தார். மதிமுகவின் முப்பெரும் விழா தொடர்பாக விரைவில் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களையும் வைகோ சந்திக்கவுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment