அமெரிக்காவின் முடிவால் யாருக்கும் பலனில்லை: ஈரான்

அமெரிக்கா ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற்றதில் யாருக்கும் பலனில்லை என்று ஈரான் அதிபர்  ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  தெஹ்ரானில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஹசன் ரவ்ஹானி பேசும்போது, "அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது அந்நாட்டுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் பயனில்லை. அமெரிக்காவில் பொருளாதாரத் தடைகளை எதிர்த்து ஈரான் நிற்கும். ஈரான் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை இதற்கு முன்னரும் சந்தித்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஈரான் அதிபர் ரவ்ஹானி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக புதன்கிழமை ஆஸ்திரியா சென்றிருக்கிறார். அங்கு  ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக  ரஷ்யா உள்ளிட்ட 5 வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வியன்னாவில் கூடி விவாதிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஈரான் உடனான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, உலக அளவில் ஈரானை தனிமைப்படுத்தும் வேலைகளை அமெரிக்கா செய்து வருகிறது.

ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என ட்ரம்ப் அறிவித்தார்.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் வாங்குவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ட்ரம்ப் எடுத்து வருகிறார்.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் தாங்கள் ஒப்பந்தத்தை தொடர்வதாக மற்ற வல்லரசு நாடுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

No comments:

Post a Comment