ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 25 புதிய ‘108’ ஆம்புலன்ஸ்கள்: கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
தமிழக சுகாதாரத் துறை சார்பில் 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்காக, 4 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சாலை விபத்துகளில் ஒவ்வொரு ஆண்டும் விலை மதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. விபத்துகளைக் குறைக்கவும், உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்கவும், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை வலுப்படுத்துதல், விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தலைக்காயப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தில் தற்போது 932 அவசரகால வாகனங்கள் இயங்கி வருகின்றன. 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை மூலமாக இதுவரை 72 லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். இதில் 25 விழுக்காட்டிற்கு மேல், அதாவது 18.18 லட்சம் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்காக 4 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 25 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
மேலும், குடும்ப நலத் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குடும்ப நல சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், சேலம், புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், நீலகிரி, திருநெல்வேலி மாவட்ட குடும்ப நல அலுவலகங்கள் மற்றும் குடும்ப நல இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய ஜீப் வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment