பரபரப்பான நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் ஜப்பானை வெளியேற்றியது பெல்ஜியம் அணி: கால் இறுதியில் பிரேசிலைச் சந்திக்கிறது

உலகக் கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதையடுத்து கால் இறுதி ஆட்டத்தில் பிரேசிலைச் சந்திக்கவுள்ளது பெல்ஜியம்.

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் நாக்-அவுட் சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் இரவு ரஷ்யாவின் ரோஸ்டோவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 3-4-3 என்ற பார்மெட்டிலும், ஜப்பான் 4-3-4 என்ற பார்மெட்டிலும் களமிறங்கியது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜென் ஷோஜி 35 அடி தூரத்திலிருந்து கோலை நோக்கி உதைத்த பந்து கம்பத்துக்கு உயரே சென்றது.

16-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அக்சல் விட்செல் பாக்ஸ் பகுதியிலிருந்து இடது காலால் உதைத்த பந்தை ஜப்பான் கோல்கீப்பர் எஜ்ஜி கவாஷிமா அபாரமாக தடுத்தார்.

இதேபோல ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகு அடித்த பந்தையும் ஜப்பான் வீரர்கள் அபாரமாகத் தடுத்தனர்.

27-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருயுன் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து உதைத்த பந்து கோல் கம்பத்துக்கு வெளியே சென்றது.

ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஜப்பான் வீரர் தகாஷி இனுய், டிரைஸ் மெர்ட்டன்ஸ் பாஸ் செய்த பந்தை தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தார். ஆனால் அதை ஜப்பான் கோல்கீப்பர் அருமையாகத் தடுத்து கோல் விழாமல் காத்தார்.

முதல் பாதி வரை எந்த அணியும் கோல் போடவில்லை.

இந்த நிலையில் ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ககு ஷிபாசகி பாஸ் செய்த பந்தை வலது காலால் தடுத்து கோல் வலைக்குள் திணித்தார் ஜென்கி ஹரகுச்சி. இதனால் மைதானமே ஜப்பான் வீரர்களின் கரகோஷத்தால் அதிர்ந்தது. இதையடுத்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது ஜப்பான்.

இதைத் தொடர்ந்து பெல்ஜியம் வீரர்கள் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஜப்பான் அணியினர் மேலும் ஒரு கோல் போட்டு பெல்ஜியம் அணியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். ஜப்பான் வீரர் ஷின்ஜி ககவா பாஸ் செய்த பந்தை அழகாக கடத்திச் சென்று கோலாக்கினார் தகாஷினி இனுய். இதனால் ஜப்பான் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஜப்பான் ரசிகர்கள் மைதானத்தில் ஆனந்தக் கூத்தாடினர்.

ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் தாமஸ் முனீர் கடத்தித் தந்த பந்தை ரொமேலு லுகாகு பாக்ஸ் பகுதியிலிருந்து தலையால் முட்டி கோலாக்க முயற்சித்தார். இது ஜப்பான் வீரர்களால் தடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் பெல்ஜியம் வீரர்கள் வீறுகொண்டு எழுந்து தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தனர். ஜப்பான் அணியினரின் தடுப்பாட்டத்தை உடைத்து அவர்கள் முன்னேறினர். இதற்கு அவர்களுக்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் கார்னரிலிருந்து கிடைத்த பந்தை பெல்ஜியம் வீரர் ஜான் வெர்டோன்ஜென் அபாரமாக கோல் வலைக்குள் திணித்தார். இதையடுத்து 1-2 என்ற கணக்கில் முன்னிலையைக் குறைத்தது பெல்ஜியம்.

அதற்கு அடுத்த 5 நிமிடங்களில் மேலும் ஒரு கோலைப் போட்டு ஜப்பான் வீரர்களை பீதிக்குள்ளாக்கினார் பெல்ஜியம் வீரர் மரோன் பெல்லானி. வலது புற கார்னரிலிருந்து ஈடன் ஹசார்ட் உதைத்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார் மரோன் பெல்லானி. இதனால் ஸ்கோர் 2-2 என்ற கணக்கில் சமநிலைக்கு வந்தது.

இதனால் ஆட்டத்தில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதியில் கோலடிக்க கிடைத்த வாய்ப்பை வீணாக்கினார் பெல்ஜியம் வீரர் ரொமேலு லுகாகு. ஆட்ட நேரம் முடியும் நிலையில் இரு அணிகளும் சமநிலையிலிருந்தன.

காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் 4-வது நிமிடத்தில் கோலடித்தார் பெல்ஜியம் வீரர் நேசர் சட்லி. தாமஸ் முனீர் பாஸ் செய்த பந்தை பாக்ஸ் பகுதிக்குள் கொண்டு வந்து கோல் வலைக்குள் அபாரமாக திணித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் நேசர் சட்லி. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே பெல்ஜியம் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.

ஜூலை 6-ம் தேதி கஸானில் நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசிலைச் சந்திக்கவுள்ளது பெல்ஜியம்.

Share:

No comments:

Post a Comment