டெல்லி நிர்வாக விவகாரங்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை: அமைச்சரவை ஆலோசனையைக் கேட்டு நடக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுரை
‘‘டெல்லி துணை நிலை ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் பதவி வகிக்கிறார். இவர் தலைமையிலான அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நிறுத்தி வைத்தார். முக்கிய அதிகாரிகளின் நியமனங்களையும் ரத்து செய்தார். அமைச்சரவை அனுப்பிய பல முடிவுகளை நிறுத்தி வைத்தார். இத னால் ஆளுநருக்கும் முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் இடையில் அதிகாரச் சண்டை ஏற்பட்டது.
மத்திய அரசுக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதால், டெல்லியில் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை என்று கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். மேலும், டெல்லியில் ஆட்சி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்று விளக்கம் அளிக் கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2016 ஆக. 4-ம் தேதி, ‘‘அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர்’’ என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மேல்முறையீடு செய்தது.
இதன்பேரில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் (ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண்) கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் தீர்ப்பளித்தனர். அமர்வு சார்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது:
இங்கு சர்வாதிகாரம், அராஜகத்துக்கு இடமில்லை. அரசியல் சட்டத்தை மதிக்கும் வகையில் எல்லோருடைய செயல்பாடுக ளும் இருக்க வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர், அரசு முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடுபவராக நடந்து கொள்ளக் கூடாது. டெல்லி அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், தனி மாநில அந்தஸ்து கிடையாது.
சட்டம் ஒழுங்கு, காவல் துறை மற்றும் நில விவகாரங்களைத் தவிர மற்ற துறைகளை நிர்வகிக்கவும் முடிவெடுக்கவும் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. மக்களுக்காக அறிவிக்கப்படும் நலத் திட்டங்களை அமல்படுத்த தாமதம் ஏற்பட்டால், ஆளுநருக்கும் டெல்லி அரசுக்கும் அதில் பொறுப்பு உண்டு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகள், ஆலோசனைகளைக் கேட்டுதான் ஆளுநரால் செயல்பட முடியும். அமைச்சரவை எடுக்கும் முடிவுகள் ஆளுநருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அதனால், ஆளுநரின் முடிவு கட்டாயம் என்ற அர்த்தம் இல்லை. விதி விலக்காக உள்ள விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. டெல்லி உயரதிகாரிகள் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், அதிகாரிகள் நியமனம், பணி இடமாற்றம் போன்ற அதிகாரங்கள் டெல்லி அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது’’ என்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு நேற்று வெளியானதும், ஆத் ஆத்மி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் சாலைகளில் உற்சாகமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘டெல்லி மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய வெற்றி’’ என்று மகிழ்ச்சி தெரிவித் துள்ளார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது’’ என்றார்.
டெல்லி பாஜக வரவேற்பு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை டெல்லி பாஜக வரவேற்றுள்ளது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏவும் டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயேந் தர் குப்தா கூறும்போது, ‘‘சட்டத்தைப் பின்பற்றி செயல்படும்படி டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை ஆம் ஆத்மி பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது’’ என்றார்.
டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் சங்கர் கபூர் கூறும்போது, ‘‘டெல்லி யூனியன் பிரதேசம் என்று உச்ச நீதிமன்றம் முடிவாகக் கூறிவிட்டது. எனவே, தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற அரசியல் ரீதி யான கோரிக்கையை ஆத் ஆத்மி கைவிட வேண்டும்’’ என்றார்.
No comments:
Post a Comment