உலக மசாலா: என்ன ஓர் அதிசயம்!

ந்தோனேஷியாவில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன பெண், தொலைந்துபோன இடத்திலேயே மீண்டும் கிடைத்திருக்கிறார். காணாமல் போனபோது அணிந்த உடைகளையே அணிந்திருந்தார். 52 வயது நைனிங் சுனார்ஷி, சுற்றிப் பார்ப்பதற்காக மேற்கு ஜாவாவில் உள்ள சைட்பஸ் கடற்கரைக்குச் சென்றிருந்தார். அலைகளில் கால்களை வைத்துக்கொண்டு நின்றிருந்தபோது எதிர்பாராமல் ராட்சத அலை அவரை இழுத்து சென்றது. பெரிய அலைக்கு நடுவே ஒரு பெண்ணின் கைகள் உதவி கேட்டு கத்தியதைக் கடற்கரையில் இருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள்.

யாராலும் பாய்ந்து சென்று காப்பாற்ற முடியவில்லை. காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் படையினர் வந்து நாள் கணக்கில் தேடிய போதும் நைனிங் எங்கே போனார் என்றே தெரியவில்லை. ஒரு வாரத்துக்குப் பிறகு ஓர் உடலைக் கண்டுபிடித்தார்கள். நைனிங் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல் மிக மோசமாக சேதமடைந்திருந்தபோதும் இவர் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லிவிட்டனர்.

ஆனால், அவராகத்தான் இருக்கும் என்று மீட்புப் படையினர் கூறினர். பிறகு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நைனிங் இல்லை என்பது உறுதியானது. இனியும் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறி, மீட்புப் படையினர் தேடுதலைக் கைவிட்டனர். எங்கோ உயிருடன் இருக்கிறார், என்றாவது திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.

சில நாட்களுக்கு முன்பு நைனிங்கின் மாமா, பாலபுஹன்ராட்டு கடற்கரையில் ஒரு பெண் திரும்பி வருவதாகக் கனவு கண்டார். முதலில் அதைப் பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதே கனவு வந்ததால் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். உடனே எல்லோரும் அந்தக் கடற்கரைக்குச் சென்றனர். நைனிங் தொலைந்துபோன கடற்கரையில் இருந்து வெகு அருகில் இருந்தது இந்தக் கடற்கரை. நீண்ட நேரம் காத்திருந்தும் அங்கே யாரும் வரவில்லை. ஏமாற்றமாக இருந்தது. மறுநாள் வீடு திரும்பலாம் என்று முடிவெடுத்தனர். ஞாயிற்றுக்கிழமை, காணாமல் போய் மிகச் சரியாக ஒன்றரை வருடம் கழித்து கடற்கரையில் மணலால் மூடப்பட்டு ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார். உடனே குடும்பத்தினர் ஓடிவந்தனர்.

தொலைந்து போனபோது என்ன உடைகளை அணிந்திருந்தாரோ, அதே உடைகளுடன் நைனிங் சுயநினைவின்றி கிடந்தார். எல்லோருக்கும் ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. அவரை வீட்டுக்கு அழைத்து வந்து, சுத்தம் செய்து படுக்க வைத்தனர். சுயநினைவு இல்லாததாலும் உடல் மிகவும் பலவீனமாக இருந்ததாலும் மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போதைக்கு இவரது உடல் பலவீனமாக இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. விரைவில் குணமாகிவிடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நைனிங் நினைவு திரும்பிய பிறகுதான் அவர் காணாமல் போய், திரும்பி வந்தது எப்படி என்ற விஷயம் தெரியும். ஆனால் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை, எங்கள் அம்மாவுக்கு தெய்வீக சக்தி இருப்பதால்தான் மீண்டும் திரும்பி வந்திருக்கிறார் என்கிறார்கள் இவரது குழந்தைகள்.

அட, என்ன ஓர் அதிசயம்!

Share:

No comments:

Post a Comment