நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல பிஷப், பொருளாளருக்கு சிறை தண்டனை: உயர் நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தூத்துக்குடி-நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல பிஷப், பொருளாளருக்கு 2 வாரம் சிறை தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து தேவாலயங்களில் சபைக்குழு தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் வாக்குரிமை மறுக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கவும் கடந்த ஏப்ரலில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் பிஷப் மற்றும் தேர்தல் நடத்துநரான திருமண்டல பொருளாளருக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில் ஜூன் 17-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஆர்.ஸ்டேன்லி வேதமாணிக்கம், டி.துரைராஜ், எம்.ஆரோன், ஜெ.டி.ஆனந்தராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதை கடந்த ஜூன் 14-ல் விசாரித்த நீதிமன்றம், ஜூன் 19 வரை தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தது. இருப்பினும் நீதிமன்ற தடையை மீறி ஜூன் 17-ல் தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் பிஷப் மற்றும் தேர்தல் நடத்துநரான திருமண்டல பொருளாளர் ஆகியோருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கலானது.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி எம்.வி.முரளிதரன் நேற்று பிறப்பித்த உத்தரவு: தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை திருமண்டல பேராயர் எஸ்.இ.சி.தேவசகாயம், தேர்தல் நடத்துநர்/ திருமண்டல பொருளாளர் டி.மோகன் அருமைநாயகம் ஆகியோர் மீறியுள்ளனர். நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாதது கடும் கண்டனத்துக்குரியது. இதற்கு அவர்கள் அளிக்கும் விளக்கத்தை ஏற்க முடியாது. இதனால் 2 வழக்குகளிலும் இருவருக்கும் தலா 2 வாரம் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை இருவரும் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் வழங்க வேண்டும். இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க தூத்துக்குடி சார்பு நீதிமன்றம் போலீஸாருக்கு வாரண்ட் பிறப்பிக்க வேண்டும்.

தூத்துக்குடி- நாசரேத் சிஎஸ்ஐதிருமண்டல சபை குழு தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் அலுவலராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சித்தார்த்தன், உதவி தேர்தல் அலுவலராக வழக்கறிஞர் சி.எம்.ஆறுமுகம் ஆகியோர் நியமனம் செய்யப்படுகின்றனர். இருவரும் மனுதாரர்கள் உட்பட அனைத்து தகுதியான வாக்காளர்களையும் சேர்த்து பட்டியல் தயாரித்து நியாயமான முறையில் 2 மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக பிஷப், திருமண்டல பொருளாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி தண்டனை தொடர்பான உத்தரவை 2 வாரம் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share:

No comments:

Post a Comment