குல்தீப் யாதவ் எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றினார்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன்


இங்கிலாந்தில் தன் முதல் போட்டியிலேயே 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள், அதிலும் ஒரே ஓவரில் 3 நட்சத்திர வீரர்களை திகைக்கவைக்கும் வகையில் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்ற குல்தீப் யாதவுக்கு புகழாரம் சூட்டப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், ‘குல்தீப் யாதவ் எங்களை தவறாக நம்பவைத்து முற்றிலும் ஏமாற்றிவிட்டார்’ என்று புகழ்மாலை சூட்டியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் குல்தீப்பைக் கண்டு பதற்றமடைந்தனரே தவிர அவரை நேர்மறையாக விளையாட முடியவில்லை, விளையாடத் தவறிவிட்டனர்.
இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் அணி, டி20 கேப்டன் இயன் மோர்கன் கூறும்போது, “பெங்களூருவிலும் நாங்கள் சரியாக ஆடவில்லை (அப்போது சாஹல் 6/25 என்று அசத்தினார்), ஆனால் அந்த ஆட்டத்துக்கும் இதற்கும் வேறுபாடு உள்ளது. குல்தீப் 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களை தவறான முடிவுகளை எடுக்க வைத்து ஏமாற்றிவிட்டார். பந்தைத் தூக்கி அடித்து ஆட்டமிழந்ததைக் கூறவில்லை, குல்தீப் எங்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டார், அதாவது அவர் மிகச்சிறப்பாக வீசினார்.
30-40 ரன்கள் குறைவாக எடுத்தோம். நன்றாகத் தொடங்கினோம், குல்தீப் நன்றாக வீசினார், ஆனால் அவரை இதை விடவும் சிறப்பாக ஆட முடியும். அடுத்த போட்டியில் எங்கள் திட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் அத்திட்டங்கள் சரியானதாக அமைவதை உறுதி செய்ய வெண்டும், அதனை விடாப்பிடியாக பற்றிக் கொள்ள வேண்டும்.


ஒரு ஸ்பின்னரை எடுத்த எடுப்பில், இறங்கியவுடன் ஆடுவது கடினம், ஜோஸ் பட்லர், குல்தீப் பந்து வீச வரும்போது ஏற்கெனவே 35 பந்துகளை ஆடியிருந்தார்.
ஸ்பின் பந்து வீச்சை சிறப்பாக ஆடுபவர் ஜோஸ் பட்லர். அலெக்ஸ் ஹேல்ஸ் கூட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. ஆனால் எங்களை தவறான முடிவுகளை எடுக்குமாறுச் செய்தார் குல்தீப் யாதவ்.
ஒரு பவுலர் இருபுறமும் ஸ்பின் செய்கிறார், அதனை திறம்பட மறைக்கிறார் என்பது எதிர்கொள்ளக் கடினமான ஒரு விஷயம், ஏனெனில் அதுமாதிரி வீசுவதற்கு இங்கு ஆளில்லை. அதனால்தான் குல்தீப்புக்கு எதிராக திட்டமிடல் அவசியம் என்கிறேன்.
அரை வாய்ப்புகளை நாங்கள் பிடித்திருந்தால் ஆட்டம் இன்னும் கொஞ்சம் நெருக்கமாகியிருக்கும், கிறிஸ் ஜோர்டான் பவுண்டரியில் வாய்ப்பைப் பிடித்திருந்தாலோ, அல்லது முதலில் ஜேசன் ராய் கேட்சைப் பிடித்திருந்தாலோ ஆட்டம் வேறு மாதிரி சென்றிருக்கும்
ராகுல் அருமையாக ஆடினார், இன்றைய தினத்தில் பேட்டிங்கை வெகு சுலபமாக அவர் ஆடியது போல் தெரிகிறது.
இந்திய அணி வலுவான அணி, உண்மையில் வலுவான அணி” என்றார் மோர்கன்.
Share:

No comments:

Post a Comment