உலக மசாலா: முன்னாள் குடியேறிகள் வைத்தது சட்டமா?
அ
மெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களின் குழந்தைகளும் பெற்றோரும் தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டனர். இதற்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் சேர்க்கச் சொல்லி உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களைக் குடும்பத்துடன் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையைக் கண்டித்து, வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அமெரிக்கா முழுவதும் 700 நகரங்களில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் ஸ்பெயினைச் சேர்ந்த 12 வயது லியா கயாசோ மேடையில் பேசியது அனைவரையும் கலங்கச் செய்துவிட்டது.
“நான் மியாமியில் இருந்து வந்திருக்கிறேன். வீட்டு வேலை செய்பவரின் மகள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன். என் அம்மா வேலைக்குச் செல்வது எங்கள் குடும்பத்துக்கு அவசியமானது. வேலை செய்யும் வீட்டில் உள்ள குழந்தைகளைப் பத்திரமாகவும் அன்பாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்கிறார் அம்மா. அதற்குப் பரிசாக இந்த அரசாங்கம் அவரது குழந்தைகளைப் பெரும் துயரத்தில் தள்ளியிருக்கிறது. தினமும் அம்மா வேலைக்குச் சென்று எப்போது திரும்புவார் என்று காத்திருக்கிறோம். எங்களையும் அம்மாவையும் பிரித்துவிடுவார்களோ என்று ஒவ்வொரு நொடியும் அச்சத்தில் கழிக்கிறோம். நாங்கள் நிம்மதி யாக சாப்பிட்டு நீண்ட காலமாகிவிட்டது. ஒருநாள் கூட தூக்கம் வருவதில்லை. பாடத்தைப் படிக்க முடிவதில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் தவிக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் குழந்தைகள் பிரிக்கப்படுவதையும் அவர்கள் துயரத்தில் இருப்பதையும் காணும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது. இதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். குழந்தைகளுக்குப் பெற்றோரைவிட வேறு யாரும் பாதுகாப்பும் நிம்மதியான வாழ்க்கையையும் தர முடியாது. நாங்கள் எங்கள் குடும்பத்தையும் பெற்றோரையும் எவ்வளவு நேசிக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? குழந்தைகளின் மனநிலையை ஏன் கருத்தில்கொள்ள மறுக்கிறீர்கள்?
எங்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? மோசமான கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள குழந்தைகளையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெற்றோரையும் பார்க்கும்போது இதில் சிறிதும் நியாயம் இல்லை என்று தோன்றவில்லையா? அம்மாவிடமிருந்து பிரிந்து விடுவேனோ என்ற பயத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் அம்மா உறுதியானவர், அழகானவர், தைரியமானவர். அநியாயத்தைக் கண்டால் உரக்கப் பேசவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இனிமேலும் எங்கள் குடும்பங்களும் குழந்தைகளும் துன்பப்படுவதை எங்களால் அனுமதிக்க இயலாது.
எல்லோரும் ஒன்றாகப் போராடினால் நாம் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரலாம். எல்லைகளில் வாழ்பவர்களும் மனிதர்களே. எல்லைகளில் வாழும் குடும்பத்தின் குழந்தைகளும் குழந்தைகளே. என் போன்ற அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் இங்கே பேசியிருக்கிறேன். பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பிரிக்கப்படுவதை நிறுத்தும்வரை போராடுவேன். நான் அரசாங்கத்திடமிருந்து கருணை கேட்கவில்லை. பெற்றோருடன் குழந்தைகள் இருப்பதும் அமைதியாக வாழ்வதும் குழந்தைகள், பெற்றோரின் உரிமை” என்று 2 நிமிடங்கள் அழுதுகொண்டே பேசி முடித்தார் லியா.
முன்னாள் குடியேறிகள் வைத்தது சட்டமா?
No comments:
Post a Comment