மோடியின் புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வராத ‘மேஜிக்’ ரயில்: ராகுல் காந்தி தாக்கு
பிரதமர் மோடியின் புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வராத ’மேஜிக்’ ரயில் திட்டமாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது அமேதி தொகுதிக்கு வந்துள்ளார். அமேதியில் உள்ள புர்சத்ஜங் பகுதியில் ஒரு விவசாயி, தனது நிலத்தில் விளைந்த நெல்லை அரசு விற்பனை மையத்தில் விற்கச் சென்றார். ஆனால், நீண்ட நேரம் காத்திருந்ததால், அந்த விவசாயி உடல்நலக்குறைவால் இறந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, புர்சத்ஜங் பகுதிக்கு இன்று சென்ற ராகுல் காந்தி அந்த விவசாயியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அங்கிருந்து வரும் போது, ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''பிரதமர் மோடி புல்லட் ரயில் திட்டம் குறித்து பேசி வருகிறார், உண்மையில் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வராது. அது ஒரு ’மேஜிக்’ திட்டம். டோக்லாம் எல்லையில் சீன வீரர்கள் நமது வீரர்களுடன் மோதி வருகிறார்கள். ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல், சீன அதிபருடன் அமர்ந்து மோடி பேசி வருகிறார்.
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், அனைத்து நிலைகளிலும் வாழும் மக்களின் தொழில்களும் முடங்கி, நசுங்கிவிட்டன'' என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே அமேதி தொகுதியில் இருந்து 250 இளைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குச் சமூக ஊடகத்தை திறம்பட இயக்குவது,பயன்படுத்துவது குறித்து டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஊடக மையத்தில் பயிற்சி அளிக்கவும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. அது தொடர்பாகவும் கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார்.
No comments:
Post a Comment