ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தி கொன்றதற்கு பணி விதிமுறைகளை மீறியதே காரணம்: பெண் மூலம் நோட்டமிட்டதாக விசாரணையில் தகவல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் கடந்த மாதம் தீவிரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்டதற்கு பெண்ணுடனான நட்பு, தனியார் காரில் பயணித்தது என விதிமுறைகளை மீறியதே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த அவுரங்கசீப் தெற்கு காஷ்மீரின் ஷாடிமர்க் பகுதியில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மாதம் 14-ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தீவிரவாதிகள் அவுரங்கசீப்பை கடத்திச் சென்று கொலை செய்தனர்.
இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறியிருப்ப தாவது:
அவுரங்கசீப் ஒரு உள்ளூர் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அடிக்கடி இருவரும் சந்தித்துள்ளனர். இதை நோட்டமிட்ட தீவிரவாதிகள், அவுரங்கசீப் பற்றிய தகவலை அந்தப் பெண்ணிடம் கட்டாயப்படுத்தி கேட்டுள்ளனர். அப்போது, ரம்ஜான் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும் வழியில் தன்னைப் பார்க்க அவுரங்கசீப் வருவார் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவுரங்கசீப்புக்காக தீவிரவாதிகள் காத்திருந்தனர். அப்போது காரில் வந்த அவரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். ராணுவ வீரர்கள் உள்ளூர் பெண்ணுடன் பழகக்கூடாது என பணி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இதை அவர் மீறியதே அவரது உயிரிழப்புக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
மேலும் ராணுவ வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியைக் கடக்கும் வரை குண்டு துளைக்காத ராணுவ வாகனத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அந்தப் பெண்ணைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக இந்த விதிமுறையை மீறி தனியார் காரில் பயணம் செய்துள்ளார். இதுவும் அவரது மரணத்துக்கு மற்றொரு காரணமாகி விட்டது.
இந்த சம்பவத்தையடுத்து, ராணுவ பணி விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து படைப் பிரிவு வீரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ராணுவ அதிகாரி கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment