மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு: நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் (64) மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக 2009-ம் ஆண்டில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை (1எம்டிபி) அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் தொடங்கினார். இந்நிறுவனத்தின் பல கோடி நிதியை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நஜீப் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று, மகாதிர் முகமது பிரதமரானார். இதையடுத்து, நஜீப் மீதான ஊழல் புகார் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

நஜீபின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் ஏராளமான நகைகள், கைக்கடிகாரங்கள், ஹேண்ட்பேக்குகள், ரொக்கம் என ரூ.1,850 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் நஜீப் ரசாக்கை கைது செய்தனர். மலேசிய உயர் நீதிமன்றத்தில் அவரை நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, நஜீப் மீதான குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர் வாசித்தார். ஆனால் நஜீப் இதை மறுத்தார்.

எனினும், நஜீப் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டும் மலேசிய தண்டனை சட்டத்தின் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் 3 குற்றச்சாட்டுகளும் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு பிரிவின் கீழும் 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, நஜீப் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ரூ.1.7 கோடி செலுத்துமாறும் பாஸ்போர்ட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

Share:

No comments:

Post a Comment