‘எலெக்ட்ரிக் வாகனங்களால் போர்ஜிங் துறைக்கு பாதிப்பு’
எலெக்ட்ரிக் வாகனங்களால் போர்ஜிங் துறைக்கு பாதிப்பு ஏற்படும் என இந்திய போர்ஜிங் தொழில்துறை கூட்டமைப்பின் (ஏஐஎஃப்ஐ) தலைவர் எஸ். முரளிஷங்கர் கூறியுள்ளார். 60 சதவீத போர்ஜிங் துறையினர் ஆட்டோமொபைல் உபகரண தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், எலெக்ட்ரிக் வாகனங்களில் இந்த உபகரணங்களுக்கான தேவை பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விடக் குறைவு என்பதால் போர்ஜிங் துறை 40 முதல் 50 சதவீதம் சரிவை சந்திக்கும் என்றார். இதனால் தொழில்சாலைகள் மூடப்படுதல், வேலை இழப்பு போன்றவை ஏற்படும் என்பதால் அரசு இதுகுறித்து தெளிவான திட்டத்தை வகுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் தொழில்துறைக்கு அளிக்கப்படும் மின்சாரத்தின் தரம் நன்றாக இல்லை என குறிப்பிட்டுள்ள ஏஐஎஃப்ஐ, தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க தமிழகம் நீண்ட காலம் எடுத்துக்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஸ்டீல் தட்டுப்பாடு, ஸ்டீல் விலை, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் போதிய அளவு இல்லாதது போன்றவற்றாலும் போர்ஜிங் துறை பாதிக்கப்படுவதாக ஏஐஎஃப்ஐ தெரிவித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் முந்தைய ஆண்டைவிட 10 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி கண்டுள்ள போர்ஜிங் துறை, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பகுதிகளுக்கு அதிக அளவில் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்துவருகிறது. சீனா மற்றும் ஐரோப்பாவுக்கு பிறகு உலகில் அதிக போர்ஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரியில் 7-வது ஆசிய போர்ஜிங் மாநாட்டை ஏஐஎஃப்ஐ சென்னையில் நடத்தவிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment