சசிகலாவுக்கு எதிரான வழக்கின் நீதிபதி திடீர் விலகல்
சசிகலாவுக்கு எதிரான செல்வவரி வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார். இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதி அமர்வுக்கும் பரிந்துரைத்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா கடந்த 1996-97ம் ஆண்டில் ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கு ரூ.10 லட்சத்து 13 ஆயிரம் செல்வவரி செலுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை எதிர்த்து வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை என்றும், இந்த வழக்கில் இருந்து தான் விலகுவதாகவும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தெரிவித்தார்.
இவர் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞராக இருந்தபோது வி.கே.சசிகலாவுக்காக பல வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார் என்பதால் இந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார். மேலும் இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றவும் நீதிபதிகள் இருவரும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளனர்.
No comments:
Post a Comment