ஊராட்சி தலைவரின் சவாலை ஏற்று விவசாயிகளாக மாறிய கோவா அரசியல் தலைவர்கள்
ஊராட்சித் தலைவர் ஒருவரின் சவாலை ஏற்று, கோவா மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகள் தற்போது விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவா மாநிலம் அக்வேம் பைக்சோ என்ற கிராமத்தின் ஊராட்சித் தலைவராக சித்தேஷ் பகத் என்பவர் இருந்து வருகிறார். இவர், தமது நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்களை பேஸ்புக் பக்கத்தில் அண்மையில் பதிவேற்றியிருந்தார். மேலும், அந்தப் புகைப்படங்களை காங்கிரஸ் எம்எல்ஏ அலெக்சியோ ரெஜினால்டோவுக்கு ‘டேக்’ செய்த சித்தேஷ், இதுபோல் விவசாயப் பணிகளில் ஈடுபட முடியுமா என்று பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார்.
களை எடுப்பு
இதனை ஏற்றுக்கொண்ட எம்எல்ஏ ரெஜினால்டோ, சேறும், சகதியும் நிறைந்த விவசாய நிலத்தில் இறங்கி களை எடுக்கும் பணியை மேற்கொண்டார். அத்துடன், அந்தப் புகைப்படங்களுடன் பேஸ்புக்கில் மற்ற சில அரசியல்வாதிகளுக்கு டேக் செய்தார். இதனைத் தொடர்ந்து, கட்சி பேதமில்லாமல் பல அரசியல்வாதிகளும் நிலத்தில் விவசாயப் பணியை மேற்கொண்டு அதனை புகைப்படம் எடுத்தும் மற்றவர்களுக்கு பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, கோவா வருவாய் துறை அமைச்சர் ரோஹன் கவுந்தே, வேளாண் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் உள்ளிட்டோர் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கோவா அரசியல்வாதிகளின் இந்த செயல்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
No comments:
Post a Comment