தீவிரவாதிகளின் கூடாரம் பாகிஸ்தான்: ஐ.நா. சபையில் இந்தியா குற்றச்சாட்டு
பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக உள்ளது. காஷ்மீர் குறித்து பொய்களைப் பரப்பி வருகிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தூதரக அதிகாரி எழுப்பினார். காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன. இதனை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினர்.
ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி சந்தீப் குமார் பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறியதாவது: தெற்காசிய பிராந்தியத்தில் தீவிரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குறித்து அந்த நாடு பொய்களைப் பரப்பி வருகிறது. பாகிஸ்தானின் சதி முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. இனிமேலும் வெற்றிபெறாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 25-ம் தேதி ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீலா லோதி, ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். அப்போது இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. மீண்டும் அதே விவகாரத்தை ஐ.நா. சபையில் பாகிஸ்தான் எழுப்பியுள்ளது.
கார்கில் போர் குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் நசீம் ஜெஹ்ரா எழுதியுள்ள புத்தகம் அண்மையில் வெளியானது. அதில் அன்றைய பாகிஸ்தான் தளபதி முஷாரப்பின் சதி திட்டங்கள், அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீபின் தவறான முடிவுகள் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய தவறுகளில் இருந்து பாகிஸ்தான் தலைவர்கள் இன்னமும் பாடம் கற்கவில்லை என்று செய்தியாளர் நசீம் ஜெஹ்ரா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ் தான் செய்தியாளரே அந்த நாட்டு அரசை கடுமையாகக் கண்டித்திருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
No comments:
Post a Comment