தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ‘ஜால்ரா’ போடுகின்றனர்: சுப்பிரமணியன் சுவாமி தாக்கு

தமிழகத்தில் பாஜக இருக்கிறதா என அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்திருந்தார். அதன் விவரம்:

2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக யாருடன் கைகோத்தால் பாஜகவுக்கு பலனாக இருக்கும்?

பாஜக இப்போது தமிழகத்தில் இருக்கிறதா? தமிழக பாஜக விருந்தோம்பல் மையம் போன்று செயல்படுகிறது. அரசியல் ரீதியாக மற்ற தலைவர்களுக்கு சால்வை அணிவிப்பது, அவர்களின் வீட்டுக்குச் செல்வது போன்ற செயல்பாடுகள் தான் நடந்துள்ளன. அதனால் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்று அவசியமில்லை.

தமிழக பாஜக தலைவராக தற்போதுள்ள தலைவரே தொடர்வார் என முரளிதரராவ் விளக்கம் அளித்துள்ளாரே?

எந்த வித்தியாசமும் இல்லை. வேறொரு தலைவர் வந்தாலும் அங்கிருக்கும் ஒருவர்தானே வரப்போகிறார். யாரெல்லாம் கட்சிக்குப் பலன் காட்டவில்லையோ அவர்களையெல்லாம் வெளியேற்ற வேண்டும் என்பது என் கருத்து. புதிதாக யாரையாவது கொண்டு வந்தால் தான் பாஜகவுக்கு நல்லது. ஆனால், இந்துத்துவத்திற்கு எதிர்காலம் இருக்கிறது. அதனால், இந்து ஒற்றுமையை உருவாக்கும் கட்சிக்குத் தான் எதிர்காலம் உள்ளது. பாஜக அதனைச் செய்ய முடியாது. ஏனென்றால் அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் ஜால்ரா போடுகின்றனர். இந்துக்களுக்கு சாதகமாக இருக்கிறதோ இல்லையோ எல்லாவற்றையும் தமிழக பாஜக அறிக்கையாக வெளியிடுகின்றது. இந்துத்துவாவுக்காக தமிழக பாஜக செயல்பட முடியாது.

தமிழகத்தில் பாஜகவுக்கு அடுத்த தேர்தலில் பலம் சேர்க்க ரஜினியுடன் இணைவது சரியாக இருக்குமா? அல்லது திமுகவுடன் நெருங்க வேண்டுமா?

ரஜினிகாந்த என்கிற ஆள் ஒன்றுமே கிடையாது. அவரது மனைவியின் மானம் உச்ச நீதிமன்றத்தில் போய்விட்டது. இவர்தான் ஊழலை ஒழிக்கப் போகிறாரா?

நிதித்துறை அமைச்சராக அருண் ஜேட்லி வகிக்க முடியாமல் போனபோது கூடுதல் பொறுப்பு பியுஷ் கோயலுக்கு வழங்கப்பட்டது. உங்களுக்கு வழங்கப்படவில்லை என உங்களின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தார்களே?

என் மனப்பான்மையை அறிந்த என் ஆதரவாளர்களுக்கு வெறுப்பு இருக்காது. எது எனக்கு வரவேண்டுமோ அது கிடைக்கும். அதனால் எனக்கு அதுபற்றி கவலையில்லை.

மத்திய அமைச்சராக சுப்பிரமணியன் சுவாமியை எதிர்பார்க்கலாமா?

போதும். போதும்.

2019-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது தமிழகத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வைப்பார்கள் என ஒருசில தமிழக அரசியல் கட்சிகள் கூறுகின்றன. உங்கள் கருத்து என்ன?

அப்படி எனக்குத் தெரியவில்லை. அப்படிச் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் நிறைய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். ஆனால் பாஜகவுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை கிடையாது. அதனால், மாற்றங்கள் கொண்டு வரும்போது தமிழகத்தில் தேர்தல் நடத்துவதற்கான சதியா என மற்ற கட்சிகள் கேள்வி எழுப்பும்.

“சினிமா மேஜிக்னு சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது” - கவுதம் கார்த்திக்

 

Share:

No comments:

Post a Comment