3-வது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி 11-ல் தொடக்கம்: முதல் முறையாக வெளிமாநில வீரர்கள் பங்கேற்பு

தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 3-வது சீசன் போட்டிகள் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் ஜூலை 11-ம் தேதி தொடங்கவுள்ளன.

ஐபிஎல் பாணியில் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 3-வது ‘சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல்-2018’ போட்டிகள் வரும் ஜூலை 11-ம் தேதி தொடங்குகின்றன. சென்னை, திண்டுக்கல், திருநெல்வேயில் நடைபெறும் இந்த தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருநெல்வேலி சங்கர் நகர் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது.

8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் தலா 14 ஆட்டங்களும், சென்னையில் 4 ஆட்டங்களும் நடைபெற உள்ளன.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் எல்.சிவராமகிருஷ்ணன், வி.பி.சந்திரசேகர், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் (மார்க்கெட்டிங் பிரிவு) பி.ரமேஷ் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

3-வது சீசனில் பங்கேற்க உள்ள காரைக்குடி, மதுரை, தூத்துக்குடி அணிகளை புதிய உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அந்த அணிகளின் பெயர்களும் முறையே ஐடிரீம் காரைக்குடி காளை, சீசெம் மதுரை பாந்தர்ஸ், ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்ஸ் என மாற்றப்பட்டுள்ளன.

இத்தொடரின் அனைத்து ஆட்டங்களும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளன. மேலும், இந்த சீசனில் முதல்முறையாக பிற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இருவர் ஒவ்வொரு அணியிலும் விளையாட உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Share:

No comments:

Post a Comment